தனியார் மருத்துவமனை ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
தனியார் மருத்துவமனை ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோபிநாதபுரத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் நந்தகுமார் (வயது 15). சிறுவனுக்கு கடந்த 2014-ம் ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டனர்.
மருத்துவமனையில் சிறுவனுக்கு கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறுவனின் இடுப்பு கீழ் உள்ள உறுப்புகள் செயல் இழந்து முடங்கின. பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை வரதராஜன், தனியார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆகியோர் மீது கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பின்னர் இந்த வழக்கு திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இருதரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் தீபா மற்றும் உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், கோவை தனியார் மருத்துவமனை நிர்வாகம், மருத்துவ சிகிச்சையில் அலட்சியம் மற்றும் சேவை குறைபாடு காரணமாக ரூ.20 லட்சம் இழப்பீடு தொகையை சிறுவனுக்கு வழங்க உத்தரவிட்டனர். உத்தரவு தேதியில் இருந்து 3 மாதத்துக்குள் இழப்பீடு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் இழப்பீடு தொகையை 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல்கள் ராஜேஷ் பொன்னன், மகேஸ்வரன் ஆஜரானார்கள்