ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை விவசாய வேலையில் ஈடுபடுத்த வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை விவசாய வேலையில் ஈடுபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கோாிக்கை விடுத்துள்ளனர்.
செஞ்சி,
முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கம், ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலைகளின் சங்க நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் வக்கீல் பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கரும்பு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நடப்பு ஆண்டு கரும்பு வெட்டி அனுப்பும் விவசாயிகளுக்கு கிரய தொகையை உடனடியாக பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் நந்தன் கால்வாய் திட்ட பணியை விரைவாக நிறைவேற்றி விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
விழுப்புரம் தென்பெண்ணையாற்றில் உடைந்த எல்லீஸ் சத்திரம் தடுப்பணையை சீரமைத்து தர வேண்டும், பருவமழை தொடங்குவதற்கு முன் ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்களை இலவசமாக விவசாயிகள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும், கரும்பு வெட்டுக்கூலி முழுவதும் ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அழிந்து போகும் நிலை
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தால் விவசாயம் அழிந்து போகும் நிலையில் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலை மாற தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகள் அந்தந்த கிராமங்களில் நடைபெறும்போது, பயனாளிகளை விவசாய வேலைக்கு அனுப்புவதற்கு ஏதுவாக தகுந்த திட்டத்தை தயார் செய்து விவசாய வாழ்வாதாரத்தை காக்க வேண்டி தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகளும் முன்னோடி கரும்பு விவசாயிகளுமான கலிவரதன், பெருமாள், கிருஷ்ணதாஸ், ராஜாராமன், வெங்கடாசலம், விஜயகுமார், பன்னீர்செல்வம், காத்தவராயன், ராஜசேகர், பாலசுப்பிரமணியன், நாராயணன், முத்து நாராயணன், தேவேந்திரன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.