ஊட்டியில் தூய இருதய ஆண்டவர் ஆலய திருவிழா- திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


ஊட்டியில் தூய இருதய ஆண்டவர் ஆலய திருவிழா- திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
x

ஊட்டியில் உள்ள பழமை வாய்ந்த புனித தூய இருதய ஆண்டவா் தேவாலய 127-வது ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் உள்ள பழமை வாய்ந்த புனித தூய இருதய ஆண்டவா் தேவாலய 127-வது ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது.

127-வது ஆண்டு விழா

நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்டிசோலை பகுதியில் பழமை வாய்ந்த புனித தூய இருதய ஆண்டவா் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் விழா நடைபெறும். இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான 127-வது ஆண்டு விழா கடந்த 28-ந் தேதி காலை 8 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆலய பங்கு தந்தை ஜான் ஜோசப் தனிஸ் தலைமையில் திருப்பலி, சிறப்பு பிராா்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

திருப்பலி

இதை தொடா்ந்து கடந்த 1-ந் தேதி மாலை 5.30 மணிக்கு பங்கு தந்தை ஜெரோம் தலைமையிலும், 2-ந் தேதி அருட்தந்தை பிராங்க்ளின் தலைமையிலும் சிறப்பு நவநாள், திருப்பலி மற்றும் ஆலய திருப்பவனி, மறையுரை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூய இருதய ஆண்டவர் தேவாலய விழா நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு அருட்தந்தை ஆன்டனி ராஜ் தலைமையில் ஆங்கிலத்தில் திருப்பலி நடந்தது. காலை 8.45 மணியளவில் மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் கூட்டு பாடற் திருப்பலி, புது நன்மை, உறுதிபூசுதல் மற்றும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புதுநன்மை மற்றும் உறுதிபூசுதலை ஆயர் வழங்கினார்.

மாலை 5 மணியளவில் ஆலய உதவி பங்குத்தந்தை அபிஷேக் ரோசாரியோ தலைமையில் ஆடம்பர தோ்பவனி, நற்கருணை ஆசிா் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஊட்டி மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான கிருஸ்துவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி தூய இருதய ஆண்டவர் தேவாலயம் மின் விளக்குகளால் ஜொலித்தது.


Next Story