மின்மாற்றிகளை சுற்றி பாதுகாப்பு வேலி
வால்பாறை பகுதியில் உள்ள காட்டு யானை வழித்தடத்தில் உள்ள மின்மாற்றிகளை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது.
வால்பாறை,
வால்பாறை பகுதியில் உள்ள காட்டு யானை வழித்தடத்தில் உள்ள மின்மாற்றிகளை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு முகாம்
தமிழகத்தில் காட்டு யானைகள் பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் மற்றும் மின் வேலிகளில் சிக்கி இறக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை கள இயக்குனர் பார்க்வே தேஜா ஆகியோரது உத்தரவின் பேரில், மின் வாரிய அதிகாரிகள், தேயிலை தோட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அட்டகட்டியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனமேலாண்மை பயிற்சி மையத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
அப்போது வால்பாறை பகுதியில் மின் கம்பிகள் மற்றும் மின் வேலிகளில் சிக்கி வனவிலங்குகள் இறப்பது இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
யானை வழித்தடம்
இதையடுத்து எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தாழ்வாக மின்கம்பிகள் செல்கிறதா, காட்டு யானைகளின் துதிக்கைகளுக்கு எட்டும் நிலையில் மின் கம்பிகள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. இந்தநிலையில் வால்பாறை பகுதியில் காட்டு யானை வழித்தடத்தில் மின் மாற்றிகள் உள்ள இடங்களில், மின் மாற்றிகளை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் எஸ்டேட் பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து வருகின்றனர். இதுவரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வேலி அமைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பு வேலிகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் வனப்பணியாளர்களும் யானை வழித்தடத்தில் உள்ள மின் கம்பிகள், மின் மாற்றிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.