போக்குவரத்து அம்சங்கள் கொண்ட பாதுகாப்பு கம்பம் அமைப்பு


போக்குவரத்து அம்சங்கள் கொண்ட பாதுகாப்பு கம்பம் அமைப்பு
x
தினத்தந்தி 4 July 2023 6:38 PM GMT (Updated: 5 July 2023 8:52 AM GMT)

விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அம்சங்கள் கொண்ட பாதுகாப்பு கம்பம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர்

விபத்துகள் தடுக்க...

வேலூர் மாவட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் விபத்துகளும் நடைபெறுகிறது. விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஏராளமான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றினாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்துகள் அரங்கேறி விடுகிறது.

எனவே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அங்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விபத்தினை தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் வல்லண்டராமம் கிங்கினிஅம்மன் கோவில் அருகே விபத்துகளை தடுக்க 6 வகையான பாதுகாப்பு அம்சங்களை எடுத்துரைக்கும் வகையிலான கம்பத்தை வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் விபத்துகள் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மேலும் 10 இடங்களில்

விபத்துகளை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாக புதிதாக வாகன ஓட்டிகள் அறியும் வகையில் போக்குவரத்து பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கம்பம் வைத்துள்ளோம். இரவில் அந்த கம்பம் முழுவதும் விளக்குகளால் ஜொலிக்கும். அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மெதுவாக செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு பலகை உள்ளது. ஆடியோ மூலம் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் தொடர்ந்து வழங்கும். இந்த ஆடியோவை நாம் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். மேலும் டிஜிட்டல் எழுத்து வடிவிலும் பாதுகாப்பை உறுதி செய்ய டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த டிஜிட்டல் போர்டில் மக்கள் கடக்கும் பகுதி, பள்ளி உள்ளது, மெதுவாக செல்லவும் போன்ற பாதுகாப்பு குறித்த தகவல்கள் அதில் ஒளிபரப்பப்படும். பிளிங்கர்ஸ் எனப்படும் ஒளிபிரதிபலிப்பான்களும் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது சோதனை ஓட்டமாக வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அடுத்தகட்டமாக மேலும் 10 இடங்களில் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story