'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை:தூத்துக்குடி கடலில் ரோந்து படகுகளில் சென்று போலீசார் தீவிர கண்காணிப்பு


தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 9:14 AM GMT)

சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையையொட்டி தூத்துக்குடி கடலில் ரோந்து படகுகளில் சென்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள்போல் ஊடுருவ முயன்ற 21 பேர் சிக்கினர்.

தூத்துக்குடி

பாதுகாப்பு ஒத்திகை

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் கடல்வழியாக நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கடலோர பாதுகாப்புக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் உருவாக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

ஊடுருவ முயற்சி

இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், தீவிரவாதிகள் போன்று வேடம் அணிந்து முக்கிய இடங்களில் ஊடுருவ முயற்சி செய்வதும், அவர்களை அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவது போன்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது.

ஆபரேசன் ரக்சக், ஆபரேசன் சுரக்சா, ஆபரேசன் பேரிகார்டு, ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் சாகர் கவாச் போன்ற பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

படகுகளில் சென்று...

அதன்படி, 'சாகர் கவாச்' என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. காலை முதல் கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், கியூ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் போலீசார் படகுகளில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

21 பேர் கைது

அப்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து 6 கடல் மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக ஒரு விசைப்படகு வந்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்தனர். அந்த படகில் 6 பேர் இருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அதேபோன்று 7 கடல் மைல் தொலைவில் மற்றொரு படகும் வந்தது. அந்த படகிலும் 6 பேர் இருந்தனர். அவர்களையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் தீவிரவாதிகள் போன்று வேடம் அணிந்து ஊடுருவ முயன்றது தெரியவந்தது.

மேலும், தூத்துக்குடி அருகே உள்ள ஸ்பிக் நிறுவனம் அருகில் சுற்றித்திரிந்த 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். சிறிது நேரத்தில் தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் 2 பேரையும், தெர்மல்நகர் பகுதியில் 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

நேற்று தீவிரவாதிகள்போல் ஊடுருவ முயன்றதாக மொத்தம் 21 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு வரை நடக்கிறது. இதனால் அனைத்து பாதுகாப்பு துறையினரும் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர்.


Next Story