சென்னிமலை அருகே சீரான காவிரி குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சென்னிமலை அருகே சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
சென்னிமலை
சென்னிமலை அருகே சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
சாலை மறியல்
சென்னிமலை அருகே உள்ள பாலத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கமேடு காலனி. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிக்கு பல நாட்களாக சீரான காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை 8 மணி அளவில் சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் வெங்கமேடு பஸ் நிறுத்த பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
சாலை மறியல் போராட்டத்தால் அந்த வழியே சென்ற அரசு பஸ் மற்றும் ஊத்துக்குளி, திருப்பூர் போன்ற பகுதிகளில் செயல்படும் பனியன் நிறுவனங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நின்றன. இது பற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் மற்றும் சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது பொதுமக்கள் அவர்களிடம் கூறுகையில், வெங்கமேடு பகுதிக்கு கடந்த 40 நாட்களுக்கு மேலாக சீரான காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்கள்.
இதற்கு அதிகாரிகள், காவிரி குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை விரைவில் சரி செய்து 10 நாட்களில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பொதுமக்களின் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.