கோபியில் வியாபாரிகள் திடீர் சாலை மறியல் முயற்சி


கோபியில் வியாபாரிகள் திடீர் சாலை மறியல் முயற்சி
x

கோபியில் வியாபாரிகள் திடீர் சாலை மறியல் முயற்சி

ஈரோடு

கடத்தூர்

பவானியில் இருந்து தொப்பூர் வரை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி மற்றும் மேம்பாட்டுப் பணிக்கு இடையூறாக உள்ள உயிர் உள்ள மரங்களை அகற்ற கடந்த மாதம் 6-ந் தேதி அன்று நெடுஞ்சாலை துறை சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 950 மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று கோபி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பகிரங்க ஏலம் விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக கோபி, சத்தியமங்கலம், பவானி, ஈரோடு, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நெடுஞ்சாலை துறை அலுவலகத்துக்கு 131 பேர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் வரைவோலை (டி.டி.) கொடுத்துவிட்டு அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் பகிரங்க ஏலத்தை ஆன்லைனில் நடத்தியதாகவும், அதில் சிலர் கலந்து கொண்டதாகவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் சாலை மறியல் செய்ய கோபி-சத்தி ரோட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து தகவல் கிடைத்து கோபி போலீசார் அங்கு சென்று அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் வியாபாரிகளிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் வியாபாரிகளிடம் கூறும்போது, 'ஏலம் மறுதேதி பின்னர் வெளியிடப்படும்' என்றனர். இதை வியாபாரிகள் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.


Next Story