கோபி அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்; நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து போராட்டம்
கோபி அருகே நெல்லை கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடத்தூர்
கோபி அருகே நெல்லை கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தின் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது பாசன பகுதிகளில் முதல்போக சாகுபடிக்கான அறுவடை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் வாங்கப்படுகிறது.
இந்த நிலையில் புதுக்கரைபுதூரை சேர்ந்த விவசாயிகள் சிலர் நேற்று அந்தியூர்-கோபி சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அந்த வழியாக கவுந்தப்பாடியில் இருந்து கோபி சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குத்தகைக்கு...
அப்போது விவசாயிகள் கூறும்போது, 'தற்போது நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும் வியாபாரிகளின் நெல்லை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நெல் கொள்முதல் நிலையங்களில் நில உரிமையாளர்களின் ஆவணங்கள் பெறப்பட்டு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குண்டான தொகையை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
நில உரிமையாளர்கள் பலரிடம் இருந்து எங்கள் பகுதியை சேர்ந்த சில விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் நாங்கள் அறுவடை செய்த நெல்லை புதுக்கரைப்புதூரில் உள்ள கொள்முதல் நிலையத்துக்கு இன்று (அதாவது நேற்று) விற்க கொண்டு சென்றோம்.
கொள்முதல் செய்ய மறுப்பு
ஆனால் நாங்கள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய மறுத்துவருகின்றனர். இதனால் நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். நாங்கள் அறுவடை செய்த நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்' என்றனர்.
அதற்கு போலீசார், 'அதிகாரிகளிடம் பேசி நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சாலை மறியலால் அந்தியூர்-கோபி ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.