பேராசிரியர்கள்- ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும்
பேராசிரியர்கள்- ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும்
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் வலியுறுத்தினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு துணை தலைவர் ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரம் வருமாறு:-
ஞானமோகன்(இ.கம்யூ): உறுப்பினராக பதவி ஏற்று பொதுமக்களுக்கு போதிய வசதிகளை சரியாக செய்ய முடியவில்லை. இதனால் பொதுமக்கள் கோபத்தி்ல் என்னை அடிப்பேன் என்று பேசுகின்றனர். எனவே உடனடியாக அனைத்து சாலை வசதிகளையும் செய்து தர வேண்டும்.
வேதரத்தினம்(மா.கம்யூ): கொருக்கை ஊராட்சியில் 4 தலைமுறையாக வசிக்கும் மக்களின் வீடுகளை காலி செய்யும் அரசின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
சம்பளம் வழங்க வேண்டும்
பக்கிரி அம்மாள்(தி.மு.க.): கச்சனம் பகுதியில் அங்காடி கட்டித்தர வேண்டும். ஆண்டிதோப்பு பகுதியில் தண்ணீர் வசதி மற்றும் சாலை வசதி செய்து தர வேண்டும்.
ஆரோக்கியமேரி(தி.மு.க.): வரம்பியம் ஊராட்சியில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
பாஸ்கர்: நிதி குறைவாக வருவதால் பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை. இருந்தாலும் பணிகளை தேவை அறிந்து செய்து வருகிறோம். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கை ஊராட்சியில் 4 தலைமுறையாக வசித்து வரும் குடியிருப்புகளை இந்த இடத்தில் குளம் இருந்ததாக கூறி கோர்ட்டின் ஆணையை காட்டி அரசு காலி செய்ய முயற்சிக்கிறது. எனவே அந்த மக்களை காலி செய்யக்கூடாது. அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி பாதுகாக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும். ரூ. 10 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. விரைவில் சாலைகள் அனைத்தும் புதிய தார்சாலைகள் மற்றும் சிமெண்டு சாலைகளாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.