எலி பேஸ்ட் விற்க, பயன்படுத்த முற்றிலுமாக தடை
எலி பேஸ்ட் விற்பனை செய்ய, பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
எலி பேஸ்ட் விற்பனை செய்ய, பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
விற்க தடை
சமீப காலமாக ஏராளமானோர் தற்கொலை செய்து உயிரிழக்க காரணமாக உள்ளதாக கூறப்படும் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடிய மஞ்சள் பாஸ்பரஸ் எலி பேஸ்ட் மருந்தினை வேளாண்மை மற்றும் இதர உபயோகங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. பொதுவாக மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்து வீடு மற்றும் கடைகளில் எலிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதனை குழந்தைகள் பல் துலக்கும் பேஸ்ட் என கருதி உபயோகப்படுத்தக் கூடிய அபாயம் ஏற்படுகிறது.
இதற்கு எதிர்வினை மருந்து இல்லாத காரணத்தினால் மத்திய, மாநில அரசுகள் இதனை தயாரிக்கவும், பயன்படுத்தவும் முழுவதுமாக தடை செய்துள்ளது. எனவே பொதுமக்கள் மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்தினை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த கூடாது.
கடும் நடவடிக்கை
வேளாண் பூச்சி கொல்லி மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் இதர கடைகளில் எலி பேஸ்ட் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகம், அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பூச்சி மருந்து விற்பனையாளர்கள் மற்றும் இதர கடை விற்பனையாளர்கள் மஞ்சள் பாஸ்பரஸ் எலி பேஸ்ட் மருந்தை விற்பனை செய்வது தெரிய வந்தால் பூச்சி மருந்து தடைச்சட்டத்தின்கீழ், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.