கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயர் ரக போதை பொருள் விற்பனை


கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயர் ரக போதை பொருள் விற்பனை
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பிடிபட்ட ரவுடிகள் கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயர்ரக போதை பொருள் விற்றதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கோயம்புத்தூர்

கோவை

பெங்களூருவில் பிடிபட்ட ரவுடிகள் கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயர்ரக போதை பொருள் விற்றதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

உயர்ரக போதை பொருள்

பெங்களூருவில் பதுங்கி இருந்த கோவையை சேர்ந்த ரவுடிகளான சுஜிமோகன், அஸ்வின் என்ற அஸ்வின் குமார், அமர்நாத், பிரசாந்த், ராஜேஸ், புள்ளி பிரவீன் என்ற பிரவீன்ராஜ், பிரதீப் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.

அதன் விவரம் வருமாறு:-

சுஜிமோகன் உள்ளிட்ட 7 பேர் கும்பலும் பெங்களூருவில் இருந்து உயர் ரக போதைப்பொருளான மெத்தபெட்டமைன் என்ற போதை பொருளை கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்து உள்ளனர். குறிப்பாக கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள், ஐ.டி. ஊழியர்களை குறிவைத்து இந்த விற்பனையில் ஈடுபட்டதும், ஒரு கிராம் போதைபொருளை ரூ.3,500 வரை விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

55 கிராம் போதை பொருள் பறிமுதல்

கைதான சுஜிமோகனிடம் இருந்து 55 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் அஸ்வினிடம் இருந்து 1.2 கிலோ கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 7 பேர் மீதும் கோவையில் உள்ள சரவணம்பட்டி, ரத்தினபுரி, துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், பீளமேடு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருத்தல், அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் 7 பேரும் கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் நீதிமன்றங்களில் முறையாக ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story