தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது. மேலும் இ-போஸ்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவை
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது. மேலும் இ-போஸ்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தபால் நிலையங்களில் விற்பனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து மக்களும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவதற்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் தேசியக்கொடியின் விற்பனை தொடங்கி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை களைகட்டி உள்ளது.
கோவையில் ஆர்.எஸ்.புரம், குட்ஷெட் ரோடு ஆகிய பகுதிகளில் தலைமை தபால் நிலையங்கள் உள்ளன. இதுதவிர மாவட்டம் முழுவதும் 80 துணை தபால் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
கோவையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை நேற்று தொடங்கியது. அங்கு ஒரு தேசியக்கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று பெரும்பாலானோர் தபால் நிலையங்களில் தேசியக்கொடியை வாங்கி சென்றனர்.
இ-போஸ்ட் வசதி
இதுகுறித்து கோவை தபால் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவையில் உள்ள தபால் அலுவலகங்களில் ஆண்டுதோறும் தேசியக்கொடி விற்பனை நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டும் விற்பனையை தொடங்கி உள்ளோம்.
பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியும் தேசியக்கொடி வாங்குவதற்காக இ-போஸ்ட் வசதியை பயன்படுத்தலாம். இதற்காக அவர்கள் விண்ணப்பித்தால் தபால் அலுவலக ஊழியர்களே நேரில் சென்று தேசியக்கொடியை ஒப்படைப்பார்கள்.கோவையில் உள்ள தபால் அலுவலகங்களில் விற்கப்படும் தேசியக்கொடிக்கு மாவட்ட அளவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. எனவே நடப்பாண்டு சுமார் 40 ஆயிரம் தேசியக்கொடியை விற்பனை செய்வது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.