10 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது
விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது
விழுப்புரம்
தக்காளி விலை உச்சம்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்களின் சிரமத்தை சற்று குறைக்கும் விதமாக கடந்த வாரம் முதல் சென்னையில் 85 ரேஷன் கடைகள் மூலமாக கூட்டுறவுத்துறை சார்பில் தக்காளி விற்பனை தொடங்கியது.
இந்த நிலையில் முதல்-அமைச்சரின் உத்தரவின்படி பொதுமக்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் நேற்று முதல் மொத்தம் 302 ரேஷன் கடைகளில் கூட்டுறவுத்துறை சார்பில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது.
10 ரேஷன் கடைகளில் விற்பனை
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 10 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது. இதற்காக விழுப்புரம் ஜானகிபுரத்தில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து 100 கிலோ தக்காளியை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கொள்முதல் செய்து விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ் இயங்கி வரும் விழுப்புரம் கமலா நகர் பகுதியில் உள்ள 2 ரேஷன் கடைகள், விழுப்புரம் மந்தக்கரை, ஜால்னா முதலியார் தெரு, ரங்கநாதன் சாலை உள்ளிட்ட 10 ரேஷன் கடைகளுக்கு தலா 10 கிலோ தக்காளி வீதம் அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
உடனுக்குடன் விற்றுத்தீர்ந்தது
இவை கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில் தக்காளி அதிகம் வராததால் ஒரு நபருக்கு ½ கிலோ என்ற அளவில்தான் விற்பனை செய்யப்பட்டது. ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுவதை அறிந்த பொதுமக்கள் அங்கு போட்டி போட்டுக்கொண்டு சென்று வாங்கினர். இதனால் விற்பனை தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே தக்காளி விற்றுத்தீர்ந்தது. தக்காளி வரத்து அதிகரித்து விலை சீராகும் வரை ரேஷன் கடைகள் மூலம் தொடர்ந்து தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும், இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.