சேலம் மத்திய சிறையில் சாராய ஊறலுக்கு திட்டமா?வடமாநில 10 கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடைசிறை சூப்பிரண்டு நடவடிக்கை
சேலம் மத்திய சிறையில் வடமாநிலங்களை சேர்ந்த 10 கைதிகள் சாராய ஊறல் போடுவதற்கு திட்டமிட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களை 3 மாதம் உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மத்திய சிறையில் வடமாநிலங்களை சேர்ந்த 10 கைதிகள் சாராய ஊறல் போடுவதற்கு திட்டமிட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களை 3 மாதம் உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய சிறை
சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் சுமார் 850-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து சிறைக்காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆனால் அவ்வப்போது சிறை கைதிகளிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் கைதிகள் சிலர் ஒன்று சேர்ந்து தங்களுக்கு உறவினர்கள் மூலம் வழங்கப்பட்ட பழங்களை பாட்டிலில் அடைத்து மண்ணுக்குள் சாராய ஊறல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதனால் சிறையில் உள்ள கைதிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சூப்பிரண்டு ஆய்வு
இந்தநிலையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 8 பேர், மராட்டியத்தை சேர்ந்த ஒருவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 பேர் கஞ்சா, வழிப்பறி போன்ற வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று மாலை சிறை சூப்பிரண்டு வினோத் தலைமையில் சிறைக்காவலர்கள் சிறையில் 8-வது பிளாக்கில் உள்ள 11 மற்றும் 12-வது அறைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, வடமாநிலங்களை சேர்ந்த 10 கைதிகளும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை சுத்தம் செய்து அதன் தோலை உறித்து கொண்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சந்தேகத்தின்பேரில் அவர்களிடம் பழங்கள் எப்படி கிடைத்தது?. இதை வைத்து சாராய ஊழல் ஏதேனும் செய்வதற்காக பழங்களின் தோலை உறிக்கிறீர்களா? என்று சிறைக்காவலர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அப்படி ஒன்றும் இல்லையே? எனவும், இரவு டிபன் சப்பாத்திக்கு குருமா? தயாரிக்க பழங்களை சுத்தம் செய்து தயார் செய்வதாகவும் அவர்கள் கூறினர்.
சாராய ஊறலுக்கு திட்டமா?
ஆனால் அவர்கள் மீது சிறை சூப்பிரண்டு வினோத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது, சிறைக்குள் சாராய ஊறல் வைக்க அந்த கைதிகள் திட்டமிட்டு இருக்கலாம்? என்று சிறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் சம்பந்தப்பட்ட வடமாநில கைதிகள் 10 பேரையும் அவர்களது வக்கீலை தவிர உறவினர்கள் யாரும் 3 மாதங்களுக்கு சந்திக்க தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு வினோத் கூறுகையில், சிறையில் உள்ள கைதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கஞ்சா, வழிப்பறி, போதை பொருட்கள் கடத்தலில் கைது செய்யப்பட்ட வடமாநில கைதிகள் 10 பேர் ஒன்றாக அமர்ந்து பழங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
சாராய ஊறல் போடுவதற்கு தயார் செய்து வரலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவர்களை உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் சாராய ஊறல் எதுவும் போடவில்லை. கைதிகளிடம் இருந்து ஆப்பிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 10 பேரும் தனித்தனி அறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அனைத்து சிறைகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம், என்றார்.