தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோ-ஆப்டெக்சில் ரூ.7¼ கோடி விற்பனை இலக்கு கலெக்டர் கார்மேகம் தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோ-ஆப்டெக்சில் ரூ.7¼ கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:- கோ-ஆப்டெக்சில் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சீபுரம், ஆரணி, தஞ்சாவூர், சேலம் பட்டு சேலைகள் மற்றும் மென்பட்டு சேலைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் சேலைகள், ஆர்கானிக் மற்றும் களம்காரி காட்டன் சேலைகள் நேர்த்தியான வண்ணங்களில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டேபுள் மேட், ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் மற்றும் இலவம்பஞ்சு மெத்தைகள், தலையணைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் ஆத்தூா் மற்றும் சேலம் கோ-ஆப்டெக்சில் ரூ.7 கோடியே 30 லட்சத்துக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
இந்த விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் காங்கேயவேலு, மேலாளர் பாலமுருகன், துணை மண்டல மேலாளர் சுப்ரமணிஉள்பட பலர் கலந்துகொண்டனர்.