தண்டவாள பராமரிப்பு பணி காரணமாகசேலம்-கோவை பயணிகள் ரெயில் ரத்து
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம்-கோவை பயணிகள் ரெயில் ஜனவரி மாதம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சூரமங்கலம்,
சேலம்-கோவை ரெயில்
திருப்பூர்-கோவை மார்க்கத்தில், வஞ்சிபாளையம்-சோமனூர் இடையே தண்டவாள பாதையில் பராமரிப்பு பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜனவரி 31-ந் தேதி வரை நடக்கிறது. இதனால் சேலம்-கோவை பயணிகள் ரெயில் (06803), கோவை-சேலம் பயணிகள் ரெயில் (06802) ஜனவரி மாதம் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் பிலாஸ்பூர்-எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (22815) 2 மணி நேரம் 30 நிமிடமும், ஜெய்ப்பூர்-கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (12970) 1 மணி நேரம் 30 நிமிடமும், பாட்னா-எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (22670) 1 மணி நேரமும், நன்டேட்- எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (07189) 3 மணி நேரமும் திருப்பூர் பகுதியில் இருந்து தாமதமாக புறப்பட்டு செல்லும்.
தர்மபுரி, ஓசூர்
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர்-குப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி எர்ணாகுளம்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12683) நாளை எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மாற்று வழி பாதையாக சேலம், ஓமலூர், தர்மபுரி, ஓசூர், பையப்பனஅள்ளி வழியாக இயக்கப்படும். வழக்கமான பாதையான திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக செல்லாது.
பெங்களூரு-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16526) ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் பெங்களூரு கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, ஓமலூர் வழியாக இயக்கப்படும். வழக்கமான பாதையான கிருஷ்ணராஜபுரம், ஒயிட்பீல்டு, மாலூர், பங்காருபேட்டை, குப்பம், திருப்பத்தூர் வழியாக இயக்கப்பட மாட்டாது.
இந்த தகவல்களை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.