சேலம் சிறை தலைமை வார்டர் பணி நீக்கம்


சேலம் சிறை தலைமை வார்டர் பணி நீக்கம்
x

காஞ்சீபுரத்தை சேர்ந்த கைதி தப்பி செல்ல உதவியாக இருந்த சேலம் சிறை தலைமை வார்டர் பணி நீக்கம் செய்து சூப்பிரண்டு தமிழ்செல்வன் உத்தரவிட்டு உள்ளார்.

சேலம்

காஞ்சீபுரத்தை சேர்ந்த கைதி தப்பி செல்ல உதவியாக இருந்த சேலம் சிறை தலைமை வார்டர் பணி நீக்கம் செய்து சூப்பிரண்டு தமிழ்செல்வன் உத்தரவிட்டு உள்ளார்.

சேலம் மத்திய சிறை

காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் வசந்த். இவர் மீது காஞ்சீபுரம் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ஒரு வழக்கு சம்பந்தமாக காஞ்சீபுரம் போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வசந்த்தை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியில் வருவது குறித்து காஞ்சீபுரம் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து மற்றொரு வழக்கில் கைது செய்வதற்காக சம்பவத்தன்று காஞ்சீபுரம் தனிப்படை போலீசார் சேலம் மத்திய சிறை வாசல் முன்பு காத்திருந்தனர். வெகு நேரம் ஆகியும் வசந்த் வெளியில் வரவில்லை. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கிருந்த வார்டர்களிடம் கேட்டனர். அதற்கு ஜாமீன் பெற்ற வசந்த் ஏற்கனவே ஜெயிலில் இருந்து வெளியில் சென்று விட்டார் என்று கூறினர்.

சந்தேகம்

அப்போது தனிப்படை போலீசார் வெகுநேரம் சிறை வாசல் முன்பு தான் காத்துக்கொண்டு உள்ளோம். ஆனால் அவர் பிரதான வழியில் வெளியில் வரவில்லை என்று தெரிவித்தனர். அதற்கு வார்டர்கள் பிரதான வழியில் தான் வசந்த் வெளியில் சென்றார் என்று கூறினார். இதனால் தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கைதி வசந்த், சிறை கேன்டீன் கதவு வழியாக சிறையில் இருந்து வெளியில் சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து தனிப்படை போலீசார் காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, காஞ்சீபுரம் சூப்பிரண்டு, சேலம் சிறை சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தார்.

பணி நீக்கம்

அதன்பேரில் விசாரணை நடத்தி தலைமை வார்டர் ரமேஷ்குமார் (வயது 40), வார்டர் பூபதி ஆகிய 2 பேர் 2 மாதங்களுக்கு முன்பு தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் சேலம் சிறையில் இருந்த கைதி கேன்டீன் வழியாக செல்ல யார்? காரணம் என்பது குறித்து விசாரணை நடத்த கோவை சிறைத்துறை கூடுதல் சூப்பிரண்டு சதீஷ்குமார் நியமிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக அவர் தீவிர விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணை அறிக்கையை சேலம் சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வனிடம் வழங்கினார்.

இந்த நிலையில் சிறை தலைமை வார்டர் ரமேஷ்குமார் பணி நீக்கம் செய்து சூப்பிரண்டு தமிழ்செல்வன் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து சூப்பிரண்டு தமிழ்செல்வனிடம் கேட்டபோது, கைதி வசந்த், சேலம் சிறையில் இருந்து வேறு வழியாக செல்ல தலைமை வார்டர் ரமேஷ்குமார் உதவியாக இருந்தது விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ரமேஷ்குமார் பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து உத்தரவிட்டு உள்ளேன் என்று கூறினார்.


Next Story