சேலம் ஜெயிலில் கைதிகள் ரகளை; 6 பேர் மீது வழக்குப்பதிவு
சேலம் ஜெயிலில் கைதிகள் ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயில்
சேலம் மத்திய சிறையில் ஒரே வழக்கில் தொடர்புடைய கோவையை சேர்ந்த 8 கைதிகளை தனி தனி அறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர்களது கூட்டாளிகள் 6 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் ரகளையில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த டியூப் லைட்டுகளை அவர்கள் அடித்து நொறுக்கினர். இதுதவிர தங்களது உடலில் கீறிக்கொண்டு காம்பவுண்ட் சுவர் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கீழே இறக்கினர். அவர்களுக்கு சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் 6 பேரும் 3 மாதத்துக்கு உறவினர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரகளையில் ஈடுபட்ட கைதிகள் மீது ஜெயிலர் மதிவாணன் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ரகளையில் ஈடுபட்ட அஸ்வின்குமார் (வயது29), சோபன் (23), ராமன் (25), சங்கர் (22), தீனா (22), பர்வீன் (22) ஆகிய 6 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.