சேலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிய பெண் தற்கொலை முயற்சி


சேலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிய பெண் தற்கொலை முயற்சி
x

சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிய பட்டதாரி பெண் தூக்கில் தொங்கினார். மேலும் அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம்

பட்டதாரி இளம்பெண்

சேலம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரும் எம்.காம் பட்டதாரியான நவனீதா (வயது 28) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக நவனீதா கடந்த சில மாதங்களாக படித்து வந்தார். கடந்த 26-ந் தேதி நடந்த சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வில் அவர் கலந்து கொண்டு எழுதினார்.

நேற்று முன்தினம் காலையில் சரவணன் வேலைக்கு சென்று விட்டார். மகன் பள்ளிக்கு சென்று விட்டார். நவனீதா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையே அவருடைய தங்கை பலமுறை அக்காளை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அதை அவர் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் சரவணனுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

தற்கொலை முயற்சி

சரவணன் அருகில் வசித்து வரும் நண்பர் ஒருவருக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறினார். அவரும் வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கிருந்த அறை ஒன்று உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அங்கு நவனீதா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

தேர்ச்சி பெற முடியாது

இதுகுறித்து போலீசார் கூறும் போது, கடந்த 26-ந் தேதி நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வை நவனீதா சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தேர்ச்சி பெற முடியாது என கருதி கடந்த 3 நாட்களாகவே மனவேதனையுடன் காணப்பட்டுள்ளார். இந்த விரக்தியில் தான் அவர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் தூக்கில் தொங்கியது என தெரியவந்தது என்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story