இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை விறுவிறுப்பு


இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை விறுவிறுப்பு
x

புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி நேற்று சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

சேலம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். மேலும் பொதுமக்கள் விரதம் இருந்து வீடுகளில் சாமிக்கு படையலிட்டு வழிபாடு நடத்துவர். இதனால் புரட்டாசி மாதம் முழுவதும் பெரும்பாலான மக்கள் வீடுகளில் அசைவ உணவு சமைப்பதை தவிர்த்து விடுவார்கள்.

அதன்படி நடப்பாண்டு புரட்டாசி மாதம் இன்று (திங்கட்கிழமை) பிறக்கிறது. இதனால் சேலம் மாநகரில் உள்ள பெரும்பாலானோர் வீடுகளில் நேற்று அசைவ உணவை சமைத்தனர். இதன் காரணமாக சேலத்தில் உள்ள இறைச்சி, மீன் கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை முதலே பழைய பஸ்நிலையம் அருகே உள்ள கறி மார்க்கெட், குகை, அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, நெத்திமேடு, கிச்சிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளிலும், சூரமங்கலத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் வழக்கத்தை விட வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. ஆட்டிறைச்சி கிலோ ரூ.700 முதல் ரூ.750-க்கும், பிராய்லர் கோழி கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரைக்கும், மீன்கள் ரகத்திற்கு ஏற்ப கிலோவுக்கு ரூ.50 முதல் 300 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான இறைச்சி வகைகளை வாங்கி சென்றதை காணமுடிந்தது.


Next Story