ஓமலூர், தேவூர் பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்
ஓமலூர், தேவூர் பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்தது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
ஓமலூர்,
ஓமலூர்
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டி பகுதியில் ஏராளமான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. ½ அடி முதல் 10 அடி உயரம் வரை உள்ள சிலைகள் விற்பனைக்கு தயாராக இருந்தன. அதிலும் சிங்க வாகனத்தில் ஈஸ்வரன், ஈஸ்வரி, விநாயகர், முருகன் சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் மட்டும் அல்லாமல் நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து சிலைகளை வாங்கி சென்றனர்.
தேவூர்
தேவூர் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக 1 அடி முதல் 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன. ஐந்து வாகன கணபதி, ஒய்யார கணபதி, ராஜதர்பார் கணபதி, நாகலிங்க கணபதி, காமதேனு கணபதி, ஆதிகேச கணபதி, சனிலிங்க கணபதி, மயில்வாகன கணபதி, பாண்டுரங்கன் கணபதி, பாகுபலி கணபதி உள்ளிட்ட பல்வேறு வகையான வடிவங்களில் தயாரித்தனர்.
அவ்வாறு தயாரிக்கப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கரூர், திருப்பூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், லாரி, டெம்போ, உள்ளிட்ட வாகனங்களில் வந்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.