விற்பனையாளர்கள் பணி தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டு நெறிகள் திருத்தம்


விற்பனையாளர்கள் பணி தேர்வு:  மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டு நெறிகள் திருத்தம்
x
தினத்தந்தி 11 Dec 2022 6:45 PM GMT (Updated: 11 Dec 2022 6:46 PM GMT)

விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேனி

தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் தேனி மண்டலத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 85 விற்பனையாளர்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலமாக வருகிற 14-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நேர்முகத்தேர்வு நடக்கிறது. இதையொட்டி மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டு நெறிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்ததில், அரசு உதவி டாக்டர் நிலைக்கு குறையாத டாக்டரிடம் உடல் தகுதி சான்றிதழை பெற்று சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும்போது சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய உடல் குறைபாடு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவிகளுக்கான பணியினை செய்வதற்கு தடையாக இருக்காது என்பது குறித்த மருத்துவக் குழுவில் இருந்து பெறப்பட்ட சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்சமயம் திருத்தம் செய்யப்பட்டபடி, அரசு உதவி டாக்டர் நிலைக்கு குறையாத டாக்டரிடம் உடல் தகுதி சான்றிதழை பெற்று சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும்போது சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தங்களது உரிமை கோரலுக்கு ஆதாரமாக தமிழ்நாடு அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம், தகுதி வாய்ந்த அரசு டாக்டரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு திருத்தப்பட்ட நெறிமுறைப்படி இவற்றில் ஏதேனும் ஒரு சான்றிதழுடன் பங்கேற்றாலும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வில் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story