கல் உப்பு விளைச்சல் அதிகம்


கல் உப்பு விளைச்சல் அதிகம்
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு விளைச்சல் அதிகமாக உள்ளது. விலை குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு விளைச்சல் அதிகமாக உள்ளது. விலை குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உப்பு உற்பத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலுக்கு அடுத்த படியாக உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. சாயல்குடி அருகே வாலிநோக்கம், ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, ஆனைகுடி, கோப்பேரிமடம், உப்பூர், திருப் பாலைக்குடி, சம்பை உள்ளிட்ட பல ஊர்களில் ஏராளமான பாத்திகள் உள்ளன. மாவட்டத்திலேயே அதிகமான உப்பள பாத்திகளை கொண்ட பகுதி வாலிநோக்கம் ஆகும்.

வாலிநோக்கம் பகுதியில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்த மான ஏராளமான உப்பளபாத்திகள் உள்ளன. இந்த நிலையில் தற்போது கோடைகால சீசன் நடந்து வருவதால் ராமநாத புரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி களைக்கட்டி உள்ளது.

சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் அரசு மற்றும் தனியார் உப்பளங்களில் இந்த ஆண்டு கல் உப்பு விளைச்சல் கடந்த ஆண்டு விட அதிகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் பல ஊர்களிலும் உப்பு விளைச்சல் அதிகமாக உள்ளதால் உப்பின் விலை குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை சீசன்

கடந்த மாதம் வரையிலும் ஒரு டன் உப்பு ரூ.2,500-க்கு விலை போன நிலையில் தற்போது கல் உப்பு தற்போது ரூ.1,800-க்கு விலை போகிறது. விலை குறைவுக்கு முக்கிய காரணம் உப்பு விளைச்சல் அதிகமாக உள்ளதால் தான் விலை குறைந்து உள்ளது. உப்பு உற்பத்தி சீசன் முடிவடைய இன்னும் 2 மாதங்கள் உள்ளன.

மழை சீசன் தொடங்கும் பட்சத்தில் உப்பின் விலை உயர வாய்ப்புகள் உள்ளதாகவும் வியாபாரிகள் கூறினர். வாலி நோக்கம் பகுதியில் உற்பத்தியாகும் கல் உப்புகள் தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டை கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் லாரிகளில் அனுப்பி வைக்கப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story