'இடைக்கால பட்ஜெட்டை சமத்துவ மக்கள் கட்சி வரவேற்கிறது' - சரத்குமார்


இடைக்கால பட்ஜெட்டை சமத்துவ மக்கள் கட்சி வரவேற்கிறது - சரத்குமார்
x

நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கான 2024 இடைக்கால பட்ஜெட்டை வரவேற்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

2024-2025ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டை சமத்துவ மக்கள் கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதி பட்ஜெட்டும், 2024 ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டுமான நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களால் வெளியிடப்பட்டது. "சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம்" ஆகிய மோடி அரசின் கொள்கைகளை மேற்கோள் காட்டி, இன்று தாக்கல் செய்யப்பட்ட 2024 இடைக்கால பட்ஜெட் பல்வேறு வரவேற்கத்தக்க சாராம்சங்களைக் கொண்ட பட்ஜெட்டாக வெளிவந்துள்ளது.

நவீன காலத்திற்கேற்ப சூரிய ஒளி மேற்கூரை அமைக்கும் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி, வந்தே பாரத் தரத்திற்கு 40,000 ரெயில்பெட்டிகள் தரம் உயர்த்தல், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி வீடுகள், ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய புதிய செயலி, மருத்துவக்கல்லூரிகளை அதிகரிக்க தனிக்குழு, மீன்வளத்துறையில் புதிதாக 55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம், அங்கன்வாடி பணியாளர், உதவியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் என வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி, கடந்த 2023-24 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.5,93,598 கோடி ஆக இருந்த பாதுகாப்புத்துறை நிதி, இந்த 2024-25 ஆம் ஆண்டு ரூ.11,11,111 கோடி ஆக உயர்த்தப்பட்டு, கடந்த ஆண்டை விட சராசரியாக ரூ.5,17,573 கோடி அதாவது 2 மடங்கு அதிகரித்திருப்பதும் வரவேற்கக்கூடிய அம்சமாகும்.

இருப்பினும், நடுத்தர மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு பெறாதது ஏமாற்றமளிக்கிறது. தொழிலாளர்கள் நலன் சார்ந்த திட்டங்கள், வணிகர்களின் பொருளாதார சுமையை குறைக்க அறிவிப்புகள், கட்டமைப்புகள் சாராத பிற துறைகளின் வளர்ச்சி குறித்த செயல்பாட்டு திட்ட அறிவிப்புகள் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது.

முக்கியமாக, இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 14 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதை உணர்ந்து, அதனை குறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும். இடைக்கால பட்ஜெட் என்பதால், மக்கள் எதிர்பார்த்த சில முக்கிய அம்சங்கள் முழுமையாக பட்ஜெட்டில் இடம்பெறாமல் இருந்தாலும், நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கான 2024 இடைக்கால பட்ஜெட்டை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வரவேற்கிறது."

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story