'சமத்துவபுரத்தில் சொந்தவீடு கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சி'


சமத்துவபுரத்தில் சொந்தவீடு கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சி
x

சமத்துவபுரத்தில் சொந்த வீடு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தோம் என்று சிங்கம்புணரி அருகே சமத்துவபுரம் திறப்பு விழாவில் பயனாளிகள் தெரிவித்தனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சமத்துவபுரத்தில் சொந்த வீடு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தோம் என்று சிங்கம்புணரி அருகே சமத்துவபுரம் திறப்பு விழாவில் பயனாளிகள் தெரிவித்தனர்.

சமத்துவபுரம்

சிங்கம்புணரி அருகே கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்தில் ரூ.3 கோடியே 16 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார்.

வீடுகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள் முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கூறியதாவது:-

மகேஸ்வரி: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமத்துவ புரத்தில் வீடுகள் கட்டி அதன் பின்னர் நிறைவு பெறும் தருவாயில் ஆட்சி மாற்றம் காரணமாக இந்த வீடுகள் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த ஆண்டு மீண்டும் புதிய அரசு அமைந்ததும் அதன் பின்னர் இந்த வீடுகளை சீரமைத்து தற்போது எங்களுக்கு வழங்கி உள்ளனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த வீடு இல்லாமல் கஷ்டமான நிலையில் இருந்து வந்த எங்களுக்கு தற்போது மகிழ்ச்சியாக உள்ளது.

சொந்த வீடு

முரளி: பிரமாண வகுப்பை சேர்ந்த எனக்கு நீண்ட காலமாக சொந்தவீடு இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இங்குள்ள சமத்துவபுரத்தில் சொந்தமாக வீடு கிடைத்ததால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளோம். கோவிலில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வரும் எனக்கு கடந்த பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்ததால் பெரும் சிரமமாக இருந்தது. தற்போது சொந்த வீடு கிடைத்ததால் வாடகை பணம் மிச்சமாகி குடும்பத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும்.

அங்கீகாரம்

ஜெயபிரியா: கூலி வேலை செய்து எனது குடும்பதினர் பிழைத்து வந்த நிலையில் சொந்த வீடு என்பது எட்டாக்கனியாக இருந்து வந்தது. தற்போது எங்களுக்கும் சொந்த வீடு கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் சமூகத்தில் ஒரு வித அங்கீகாரமும் எங்களுக்கு கிடைத்து உள்ளது.

செல்வராணி: நீண்டகாலமாக வாடகை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து எனது குடும்பத்தை நடத்தி வந்தேன். இதனால் மாதம் ஒரு தொகை வீட்டு வாடகைக்கு கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது சொந்த வீடு கிடைத்ததால் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் வீடு அமைந்து உள்ள பகுதியில் சிறுவர் விளையாட்டு மைதானம், நூலகம், குடிதண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளதால் எதிர்கால சந்ததிக்கு மிகவும் பயனாக அமைந்து உள்ளது.

மகிழ்ச்சி

சுப்பிரமணியன்: பிராமணர் சமூகத்தை சேர்ந்த நான் கோவில்களில் பூஜை செய்து வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தேன். தற்போது சொந்தமாக வீடு கிடைத்து உள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story