அய்யனார் முத்துசாமி கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு


அய்யனார் முத்துசாமி கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு
x

பெரம்பலூர் அருகே அய்யனார் முத்துசாமி கோவிலில் சாமி சிலைகளை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்

சிலைகள் உடைப்பு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தை அடுத்துள்ள புதுக்குறிச்சி ஏரிக்கரை ஓரத்தில் அய்யனார் முத்துசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உப தெய்வ சிலைகள் வைத்து பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்த கோவிலின் பூசாரியாக புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ்(வயது 53) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுந்தர்ராஜ் வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு, இரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கோவிலில் இருந்த அய்யனார் முத்துசாமி சிலை உள்பட மொத்தம் 7 சிலைகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

மேலும் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலில் ஒன்று கூடினர். பின்னர் இதுகுறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கோவில் சிலைகளை உடைத்த மர்மநபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story