அடையாளம் தெரியாத வாகனம் மோதி சமோசா வியாபாரி சாவு
ஆரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சமோசா வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
ஆரணி
ஆரணியை அடுத்த கொருக்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50), இவர் சேவூரில் தங்கி சைக்கிளில் சமோசா வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி ஆரணி - ஆற்காடு சாலையில் வெள்ளேரி அருகே சைக்கிளில் சமோசா விற்பனை செய்வதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரமேசின் மனைவி அமுதா ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.