சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான்; இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் பேட்டி
சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான் என்று இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கூறினார்.
இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் திருச்சி மேலப்புதூர் பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-
சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான். ஆனால் சில அரசியல் கட்சிகள் அது வேறு வேறு என பொய் பிரசாரம் செய்கிறார்கள். அரசியல் கட்சிகள் சாதிகளை தூண்டிவிட்டு இந்துக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அரியலூர் மாவட்டம், வி.களத்தூர் பகுதியில் மாற்று மதத்தினர் அதிகம் வசிப்பதாக கூறி போலீசார் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி மறுத்து, பெண்களை தாக்கி இருக்கிறார்கள். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தி.மு.க. அமைச்சர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறார்கள். ஆனால் முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்துக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் என்பதை முதல்-அமைச்சர் மறந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட பொதுச்செயலாளர் மனோஜ் குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ், அரியமங்கலம் பகுதி பொறுப்பாளர் மாரி, கவுரி சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.