விவசாய பயன்பாட்டுக்கு42 ஏரிகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதிநாளை முதல் விண்ணப்பிக்கலாம்


விவசாய பயன்பாட்டுக்கு42 ஏரிகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதிநாளை முதல் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 18 March 2023 7:00 PM GMT (Updated: 18 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்கு 42 ஏரிகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க நாளை (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வண்டல் மண்

தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 42 ஏரிகளில் விவசாய பயன்பாட்டுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன்படி பென்னாகரம் தாலுகாவில் மரவத்தி பள்ளம், பள்ளிப்பட்டி, வத்திமரத அள்ளி, வானதி, சித்தாரஅள்ளி, கரியப்பனஅள்ளி, திப்பராசன் குட்டை, எரங்காட்டு ஏரி குட்டை, கெம்மன் குட்டை, நல்லாம்பட்டி, பெரியூர் ஆகிய ஏரிகளில் வண்டல் மண் எடுக்கப்பட உள்ளது.

தர்மபுரி தாலுகாவில் அன்னசாகரம், குருபரஅள்ளி, குப்பூர், குருமன் குட்டை, சத்திரம், ஆலங்கரை, புதிய ஏரி, மாரவாடி ஆகிய ஏரிகளிலும், நல்லம்பள்ளி தாலுகாவில் மாதேமங்கலம், அதியமான்கோட்டை, லளிகம், ஏலகிரி, சின்ன ஏரி, புட்டன் கொட்டாய், சேஷம்பட்டி, பாப்பன்குட்டை, பாளையத்தாதனூர், கொமத்தம்பட்டி, பொம்மசமுத்திரம், பள்ளப்பட்டி ஆகிய ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் சான்று

இதேபோல் காரிமங்கலம் தாலுகாவில் ஜோதிப்பட்டி, மோட்டூர் ஏரிகளிலும், அரூர் தாலுகாவில் பாப்பன், மோட்டுகுறிச்சி, கொளகன், மயிளன், ஓடசல்பட்டி, கட்டையன், பெரிய ஏரி, கோட்ரப்பட்டி ஆகிய ஏரிகளிலும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தை மேம்படுத்த வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகளின் வசிப்பிடம் மற்றும் விவசாய நிலம், வண்டல் மண் எடுக்கப்பட வேண்டிய ஏரி ஒரே வருவாய் கிராமம் அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமத்தில் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.

வண்டல் மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள் உரிய விண்ணப்ப படிவத்தை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் பெற்று சிட்டா மற்றும் அடங்கல் ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்று சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

புஞ்சை நிலம்

விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதிகபட்சமாக நஞ்சை நிலமாக இருப்பின் ஏக்கர் ஒன்றிற்கு 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் ஏக்கர் ஒன்றுக்கு 90 கன மீட்டரும் வண்டல் மண் எடுக்க இலவசமாக அனுமதி வழங்கப்படும்.

விவசாய நிலங்களுக்கு வழங்கப்படும் வண்டல் மண்ணை பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தினால் அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story