மண்பானை, அடுப்பு தயாரிக்கும் பணி தீவிரம்


மண்பானை, அடுப்பு தயாரிக்கும் பணி தீவிரம்
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பகுதிகளில் மண்பானைகள், மண் அடுப்புகள் செய்யும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பகுதிகளில் மண்பானைகள், மண் அடுப்புகள் செய்யும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை

கிராமப்புறங்களில் இன்றும் 4 நாட்கள் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அன்றைய தினம் மண்பானைகளும், மண் அடுப்புகளுக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக திகழும். பாரம்பரிய முறைப்படி புதிய மண்பானை வாங்கி பொட்டு வைத்து பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி மண் அடுப்பில் ஏற்றி பொங்கல் வைப்பார்கள். பானையில் பால் பொங்கும் போது வீட்டில் அனைவரும் ஒன்றாக கூடி பொங்கலோ.. பொங்கல் என கூறும் போது குடும்பத்தில் உற்சாகத்தை பொங்க செய்யும் பொங்கல் பண்டிகை.அதைத்தொடர்ந்து வரும் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கலிலும் மண்பாண்ட பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இத்தகைய பொங்கல் பண்டிகையினால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் இன்பம் பொங்கும். அவர்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

பணிகள் தீவிரம்

பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 15-ந்தேதியும், 16-ந்தேதி மாட்டு பொங்கலும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் மண்பானைகள், அடுப்புகள் செய்யும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மண்பானைகள் ரூ.90 முதல் ரூ.500 வரையிலும், மண் அடுப்புகள் ரூ.90 முதல் ரூ.150 வரையிலும் விற்பனை செய்வதற்காக தயார் செய்யப்பட்டு வருகின்றன. மண்பாண்ட பொருட்கள் செய்வதற்காக களிமண்ணில் உள்ள கற்களை அகற்றிட வேண்டும்.பின்பு மண்ணை முறையாக காயவைக்க வேண்டும். பின்னர் அன்னக்கூடை போன்ற சல்லடைகளை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து 5 நாட்கள் தண்ணீரில் ஊற வைத்து மண்பாண்ட பொருட்கள் செய்வதற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும். பின்னர் அந்த மண்ணைக்கொண்டு அகல்விளக்கு, மண்பானை, மண் அடுப்பு உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.

அதிகளவில் விற்பனை

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் உத்திராபதி கூறியதாவது:- எனக்கு வயது தற்போது 62 வயது. நான் எனது 15-வயதில் இருந்தே மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.மண்பாண்ட பொருட்கள் விற்பனை நலிவந்து வந்தது உண்மைதான். ஆனால் தற்போது மக்கள் மீண்டும் மண்பாண்ட பொருட்களை விரும்பி வாங்கி செல்வதை காணமுடிகிறது.

இதன்காரணமாக என்னைப்போன்ற மண்பாண்ட தொழிலாளர்கள் புத்துணர்ச்சி கொண்டுள்ளோம். குறிப்பாக பொங்கல் பண்டிகை மண்பாண்ட தொழிலுக்கு எப்போதுமே புத்துயிர் வழங்கும் பண்டிகை. அன்றயை தினம் மண்பானைகள், அடுப்புகள் அதிகளவில் விற்பனை ஆகும். கோவில், கிராமபுறங்களில் மட்டுமின்றி நகர்புறங்களிலும் மக்கள் புதுமண்பானைகளில் பொங்கல் வைப்பதை விரும்புகின்றனர் என கூறினார்.


Next Story