குண்டாற்று பகுதியில் மணல் குவாரி அமைக்க கூடாது
திருச்சுழி தாலுகா ஆனைகுளம் கிராமம் அருகில் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்
திருச்சுழி தாலுகா ஆனைகுளம் கிராமம் அருகில் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்
குடிநீர் வினியோகம்
இதுகுறித்து ஆனைகுளம் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சுழி தாலுகா ஆனைகுளம் கிராமம் அருகில் குண்டாற்றில் இருந்து ஆனைகுளம், அன்னலட்சுமிபுரம், நடுவப்பச்சேரி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதன்மூலம் விவசாயமும் நடைபெற்று வருகிறது. தற்போது இப்பகுதியில் மணல் குவாரி அமைக்க அளவீடு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் மனு கொடுக்கப்பட்டது. இப்பகுதியில் குவாரி அமைத்தால் பல கிராமங்களில் குடிநீர் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கப்படும்.
போராட்டம்
எனவே மக்களின் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படாமல் மணல்குவாரி அமைக்க அனுமதி மறுத்து எங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறோம். இதுகுறித்து ஏற்கனவே அமைச்சர் தங்கம் தென்னரசிடமும் முறையிட்டுள்ளோம். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கை தங்கம் தென்னரசு முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதையும் மீறி மணல் குவாரி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் மேலே கண்ட அனைத்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அளவுக்கு போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முற்றுகை
இதனைத்தொடர்ந்து ஆனைகுளம் கிராம மக்கள் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் அருகே உள்ள ஜக்கம்மாள் புரத்தில் அருந்ததியர் சமுதாயத்தினர் வசித்து வரும் நிலையில் அங்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளதால் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் தமிழரசு, கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.