மணிமுக்தா ஆற்றில் அரங்கேறிவரும் மணல் கொள்ளை


மணிமுக்தா ஆற்றில் அரங்கேறிவரும் மணல் கொள்ளை
x

தியாகதுருகம் பகுதி மணிமுக்தா ஆற்றில் அரங்கேறி வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

மணிமுக்தா அணை

கள்ளக்குறிச்சி அருகே உள்ள சூளாங்குறிச்சி பகுதியில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. கல்வராயன்மலையில் உற்பத்தியாகி வரும் மணி மற்றும் முக்தா ஆகிய ஆறுகள் வழியாக மணிமுக்தா அணைக்கு தண்ணீர் வருகிறது. இந்த அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர் சூளாங்குறிச்சி, பல்லகச்சேரி, வீரசோழபுரம், மடம், சித்தலூர், வடபூண்டி, கொங்கராயபாளையம், உடையனாச்சி, கூத்தக்குடி ஆகிய ஊராட்சிகளில் வழியாக கடலூர் மாவட்டத்தை சென்றடைகிறது.

மணல் கொள்ளை

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றுப்பகுதியில் மணல் வளம் செழிப்பாக காணப்படுகிறது.

தற்போது மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளதால் ஆங்காங்கே மணல் மேடுகள் தெரிகின்றன. இதனால் சமூக விரோதிகள் ஆற்றில் இருந்து மணலை கடத்தி சென்று விற்பனை செய்து வருகிறார்கள். மணல் எடுத்த இடங்களில் தெரியும் பெரிய பள்ளங்களே இதற்கு சாட்சி.

மினி லாரிகளில்

தியாகதுருகம் அருகே சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில் இரவு நேரங்களில் மினி லாரிகளில் மணலை கடத்தி சென்று 1 யூனிட் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் புது உச்சிமேடு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் சாக்கு பைகளில் மணலை மூட்டையாக கட்டி மோட்டார் சைக்கிள்களில் கடத்தி சென்று விற்பனை செய்கிறாா்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மணல்கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story