மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதி தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதி தொழிலாளி பலி
x

மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

லாரி மோதியது

திருச்சி மாவட்டம், திருவளர்ச்சோலை அருகே உள்ள பனையபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் மார்ட்டின்(வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் சகாயம்(36). கூலித்தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் வேலைக்காக திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மார்ட்டின் ஓட்ட, பின்னால் சகாயம் அமர்ந்திருந்தார்.

கல்லணை-திருச்சி சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது, அதே வழியில் உத்தமர்சீலி அருகே கொள்ளிடம் ஆற்று மணல் குவாரியில் மணல் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி வந்த மணல் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.

தலை நசுங்கி சாவு

அப்போது மார்ட்டின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சகாயம் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவர் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போராட்டம்

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பனையபுரம் கிராம மக்கள் ஏராளமானோர் விபத்து நடந்த இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மார்ட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் மார்ட்டின் உடலை சுற்றி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது, மணல் லாரிகளால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நடைபெற்று உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே மணல் குவாரியை மூட உத்தரவிட்டால்தான், மார்ட்டினின் உடலை எடுக்க விடுவோம் எனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

வாக்குவாதம்

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி, திருச்சி வடக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனர் அன்பு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கும், படுகாயமடைந்தவருக்கும் உரிய இழப்பீடு வழங்கவும், மணல் குவாரியை மூடவும் வாக்குறுதி அளிக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிடுவதில்லை என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்று தருவதோடு, விபத்து ஏற்படுத்திய லாரியை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் குவாரி சம்பந்தமான உங்கள் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் போலீசார் மார்ட்டினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லணை-திருச்சி சாலையில் நடந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. லாரி, பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இந்த சம்பவத்தில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story