குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு


குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே பிச்சைக்காரன் விடுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே பிச்சைக்காரன் விடுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பைகள் சேகரிப்பு

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஈசானிய தெரு, கொள்ளிடம் முக்கூட்டு, ரெயில்வே ரோடு, சிதம்பரம் சாலை, கடை வீதி, காமராஜர் வீதி, கீழத்தெரு, திருக்கோலக்கா தெரு, வி.என்.பி.நகர், என்.எஸ்.பி.நகர், வி.என்.எஸ்.நகர், சுபஸ்ரீ கார்டன், திருவள்ளுவர் நகர், முத்து நகர், காமராஜர் அவன்யூ, புழுகாபேட்டை, தியாகராஜன் நகர், கனகராஜ் நகர், மதினா நகர், கீழ தென்பாதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளை கொண்டு 24 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாக சீர்காழி நகராட்சி இருந்து வருகிறது.

இந்த நிலையில் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள், நகராட்சி சார்பில் சேகரிக்கப்பட்டு சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள குப்பை கிடங்கில் தரம் பிரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வந்தது.

தீ வைத்து எரிப்பு

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான புளிச்சக்காடு சாலை செல்லும் பகுதியில் உள்ள பிச்சைக்காரன் விடுதியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு எரியூட்டப்படுவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள், பிச்சைக்காரன் விடுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தினமும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அருகில் உள்ள பகுதிகளில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பிச்சைக்காரன் விடுதியில் உள்ள மாமரங்கள், தென்னை மரங்கள், புளிய மரங்கள் தீயில் கருகி வீணாகி வருகிறது. எனவே இங்கு குப்பை கொட்டக்கூடாது என தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சாலை மறியல்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த விஜயரெங்கன் கூறுகையில், சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான பிச்சைக்காரன் விடுதியில் 2 ஏக்கர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மாமரங்கள், தென்னை மரங்கள், புளிய மரங்கள் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. இதன் வழியாக தான் அருகில் உள்ள பல்வேறு விலை நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல வேண்டும். இந்த விடுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இந்த இடத்தில் கடந்த சில மாதங்களாக நகராட்சி சார்பில் நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே பிச்சைக்காரன் விடுதியில் சட்ட விரோதமாக குப்பை கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதை கண்டிக்கும் வகையில் வருகிற 13-ந் தேதி சீர்காழியில் 4-வது வார்டு பொதுமக்கள் சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் செய்யப்போவதாக தெரிவித்தார்.


Next Story