வீதிகளில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
பாதாள சாக்கடை திட்ட ஆள்இறங்கு குழிகளில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் வீதிகளில் கழிவுநீர் வழிந்தோடி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
பாதாள சாக்கடை திட்ட ஆள்இறங்கு குழிகளில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் வீதிகளில் கழிவுநீர் வழிந்தோடி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பாதாள சாக்கடை திட்டம்
பொள்ளாச்சியை சுகாதாரமான நகரமாக மாற்றுவதற்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.170 கோடியே 22 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டது. நில அமைப்பின்படி 5 கழிவுநீர் சேகரிப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் நீர்உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. மேலும் தாழ்வான பகுதிகளில் நீர்உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, நீரேற்று நிலையங்கள் மூலம் கழிவுநீர் சேகரிக்கப்படுகிறது.
இந்த கழிவுநீர் சந்தைபேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று சுத்திகரிக்கப்படுகிறது. அங்கு தினமும் 11.25 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, ஜமீன்ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்திற்கு அனுப்பும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு 7,900 ஆள்இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நிரம்பி வழியும் ஆள்இறங்கு குழிகள்
இந்த நிலையில் முக்கிய சாலைகள் மட்டுமின்றி வீதிகளில் ஆள்இறங்கு குழிகள் நிரம்பி சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்கும் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து உள்ளது.
இதுகுறித்து ராஜா(பொள்ளாச்சி):
வீட்டு இணைப்புக்கு 20 அடி வரை குழாய் பதிக்க பணம் வசூலிப்பதில்லை. சில வீடுகளில் 100 அடி தூரம் வரை குழாய் பதிக்க வேண்டிய உள்ளது. இதனால் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. எந்த வீட்டிற்கு அதிக செலவு ஆகிறதோ அந்த வீட்டிற்குதான் ஒப்பந்ததாரர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர். 20 அடி தூரம் உள்ள வீடுகளை கணக்கெடுத்து இணைப்பு கொடுத்தால் நகரில் பாதி வீடுகளுக்கு இணைப்பு கொடுத்து விடலாம்.
பொது கழிப்பிடம்
முத்துக்குமார்(நந்தனார் காலனி):
நந்தனார் காலனியில் உள்ள பொது கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீடுகள் வழியாக செல்வதால் மழைக்காலங்களில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பொதுக்கழிப்பிடத்தில் இருந்து பாதாள சாக்கடைக்கு இணைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் சுகாதாரம் பாதிக்காமல் தடுக்க முடியும். மேலும் முக்கிய சாலைகளில் பல இடங்களில் ஆள்இறங்கு குழிகள் சேதமாகி கிடக்கிறது. அவற்றை கணக்கெடுத்து சீரமைக்க வேண்டும்.
நடவடிக்கை இல்லை
புத்தான்(டி.கோட்டாம்பட்டி):
பாதாள சாக்கடை திட்டத்தின் ஆள்இறங்கு குழிகள் நிரம்பி கழிவுநீர் வெளியேறுகிறது. மேலும் இணைப்பு கொடுக்கப்பட்ட வீட்டின் கழிப்பிடத்திற்குள் கழிவுநீர் திரும்புகிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எனது வீட்டுக்கு கொடுக்கப்பட்ட இணைப்பை துண்டித்து விட்டேன்.
முத்துலட்சுமி(கோட்டூர் ரோடு):
பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய்கள் சரியாக அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் நிரம்பி வெளியேறுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்து உரிய தீர்வு கிடைக்கவில்லை. மேலும் நீர்உந்து நிலையங்கள் சரிவர செயல்படுவதில்லை. நுழைவு வாயில் மூடப்படாமல் இருப்பதால் குழந்தைகள் தவறி விழும் அபாயம் நிலவுகிறது.
உபைத்ரகுமான்(குமரன் நகர்):
எங்கள் பகுதியில் உள்ள கல்லுக்குழியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் சென்றதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டது. ஆனால் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு கொடுத்த பிறகு கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. இது வரவேற்கதக்க விஷயமாகும். அதே நேரத்தில் பல பகுதியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. இதற்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.