தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2023 3:45 AM IST (Updated: 11 Aug 2023 3:46 AM IST)
t-max-icont-min-icon

நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலம் நடத்தி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

கோயம்புத்தூர்


கோவை


நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலம் நடத்தி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.


ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்


கோவை மாநகராட்சியில் குப்பைகளை அகற்றுதல், சாக்கடை அடைப்புகளை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை தூய்மை பணியாளர்கள் செய்து வருகிறார்கள். இதற்காக மாநகராட்சியில் 2,400 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 1,800 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளனர்.


இந்த நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு தினக்கூலியாக ரூ.721-யை கலெக்டர் நிர்ணயம் செய்துள்ளார். ஆனால் ரூ.415 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க கோரியும், தங்களை நிரந்த ஊழியர்களாக ஆக்க கோரியும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


காத்திருப்பு போராட்டம்


இது ஒருபுறம் இருக்க மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதனை கைவிட வலியுறுத்தியும், நிர்ணயம் செய்யப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கோவை-அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலை முன்பு இருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக கருப்புகொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.இதற்கிடையே தூய்மை பணியாளர்கள் ஊர்வலத்தை அ.தி.மு.க. அலுவலகம் அருகே தடுப்புகள் வைத்து அடைத்து போலீசார் நிறுத்தினர். இதனால் தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.


அரசாணையை ரத்து செய்ய வேண்டும்


இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-


தமிழக அரசு தூய்மை பணியை தனியார் மையத்திடம் ஒப்படைக்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையானது தூய்மை பணியாளர்களுக்கு எதிரானது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்வதுடன், தூய்மை பணி தனியார் மையமாக்குவதை கைவிட வேண்டும்.


ஒரே மாதிரியான வேலைக்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான சம்பளத்தை வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருபவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


ஆணையாளரிடம் மனு


பின்னர் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்பை சந்தித்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். அரசிடம் கலந்துபேசி உரிய முடிவு செய்வதாக அவர் தெரிவித்தார். மேலும் மாத சம்பளம் ரூ.20,068 கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.


ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக மாநகரின் பல பகுதிகளில் குப்பை அகற்றும் பணி பாதிக்கப்பட்டது.



Next Story