தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
கலெக்டர் நிர்ணயித்த ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 25 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.230 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், கடந்த 14.6.2022- அன்று தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.606 என நிர்ணயம் செய்தார். ஆனால், அந்த ஊதியம் வழங்கப்பட வில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில் கலெக்டர் நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும், பணி நேரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டன. உடனே அவர்களிடம் மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.