தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
பொள்ளாச்சி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் ஏராளமானவர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் தனியார் மயமாக்கப்பட்டதை தொடர்ந்து நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்த 50 வயதிற்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் சிலரை நீக்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில் மீண்டும் வேலை வழங்ககோரி தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். இதில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் ஸ்ரீதேவி, நகர்நல அலுவலர் முருகானந்தம், தாசில்தார் வைரமுத்து மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கார் துப்புரவு மற்றும் சுகாதார பணிகள் தொழிற்சங்க நிர்வாகிகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.
புறக்கணிப்பு
பேச்சுவார்த்தை நடக்கும் போது தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இருக்கை போடவில்லை என்று தெரிகிறது. இதனால் தொழிற்சங்க நிர்வாகி கோபால் என்பவர் தரையில் அமர்ந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சப்-கலெக்டர் வெளியே உள்ள கூட்டரங்கில் வைத்து பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளலாம் வெளியே வாருங்கள் என்று கூறினார். உடனே தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையை புறக்கணித்து வெளியே வந்தனர்.
உள்ளிருப்பு போராட்டம்
பின்னர் சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் சப்-கலெக்டர் தீண்டாமையை கடைப்பிடிப்பதாக கூறி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சப்-கலெக்டருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தாசில்தார் வைரமுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதற்கு அவர்கள் சப்-கலெக்டருக்கு மேல் உள்ள உயர் அதிகாரி தான் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறினார்கள். மேலும் சப்-கலெக்டர், நகராட்சி ஆணையாளர், தலைவர் ஆகியோரின் வாகனங்களை வெளியே விடாமல் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சப்-கலெக்டர் மீது புகார்
இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
தூய்மை பணியாளர்கள் 480 நாட்களுக்கு மேலாக பணி செய்தால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் பணி நிரந்தரம் செய்யாமல் வேலையை விட்டு நீக்கி உள்ளனர். பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை. சப்-கலெக்டர் அலுவலகத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இருக்கை கொடுக்காமல் நிற்க வைத்து பேசுகின்றனர். இது கண்டிக்கதக்கதாகும். எனவே வேலையை விட்டு நீக்கியவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். மேலும் சப்-கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) செல்வ சுரபி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதால் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து சப்-அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சப் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனு கொடுக்கப்பட்டது.