தூய்மை பணியாளர்கள் போராட்டம்
பழனி முருகன் கோவிலில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பழனி முருகன் கோவிலில், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் 330 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் படிப்பாதை, மலைக்கோவில், மின் இழுவை ெரயில் நிலையம், ரோப்கார் நிலையம், பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கூடம், கோவில் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணியில் ஈடுபடுகின்றனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் பழனி தண்டபாணி நிலையத்தில் குவிந்த தூய்மை பணியாளர்கள், திடீரென பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பழனி முருகன் கோவிலில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. மேலும் இது தொடர்பாக பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த பழனி அடிவாரம் போலீசார் மற்றும் கோவில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து தூய்மைப்பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடுத்த மாதம் (மே) ஊதிய உயர்வு அளிப்பதாக கோவில் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு தூய்மைப்பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக பழனியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.