தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் போராட்டம்
பணிநிரந்தரம் செய்யக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கள்ளக்குறிச்சி
பெருந்திரள் போராட்டம்
தமிழ்நாடு குடிநீர் டேங்க் ஆபரேட்டர், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். தலைவர் வீராசாமி, செயலாளர் சேட்டு, பொருளாளர் பாலு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கோரிக்கைகள்
ஊராட்சி குடிநீர் டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலருக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும் நல வாரிய மஞ்சள் அட்டை சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக வழங்கி பண பயன்களை வழங்க வேண்டும், பஞ்சாயத்து ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.
தடுத்து நிறுத்த வேண்டும்
மேலும் அரசு ஆணையின்படி கூடுதல் மின்மோட்டாரை இயக்க ரூ.250, நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய ரூ.300 மற்றும் டார்ச் லைட், சீருடை, காலணி மற்றும் உபகரணங்கள் வழங்க வேண்டும், ஊராட்சி ஊழியர்களை காரணம் இல்லாமல் பணி நீக்கம் செய்வது, ஊதியம் வழங்க மறுப்பது, ஊழியர்களை இழிவாக பேசுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் முத்துலிங்கம், வீரமுத்து, ராமக்கண்ணு, கஸ்தூரி, சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.