சரண் அடைந்த சஞ்சய் ராஜாவை காவலில் எடுத்து போலீசார் விசாரணை


சரண் அடைந்த சஞ்சய் ராஜாவை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 March 2023 12:15 AM IST (Updated: 4 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த சஞ்சய் ராஜாவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்


ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த சஞ்சய் ராஜாவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

துப்பாக்கியால் சுட்டுகொலை

கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி. ரவுடி. இவர் மீது கோவை, மதுரையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை கடந்த மாதம் 12-ந் தேதி மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது.

இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது.

இதற்கிடையே சத்தியபாண்டி கொலை தொடர்பாக சஞ்சய் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரக்கோணம் கோர்ட்டிலும், சஞ்சய் ராஜா என்பவர் சென்னை எழும்பூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

கத்தியை பதுக்க உதவி

இந்த நிலையில், ரேஸ்கோர்ஸ் போலீசார் சஞ்சய் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரையும் கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கடந்த வாரம் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவை தீத்திப்பாளை யத்தை சேர்ந்த இருசக்கர வாகன ஒா்க் ஷாப் நடத்தி வந்த மணிகண்டன் (25) என்பவர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பதுக்கி வைக்க உதவியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை கடந்த 28-ந் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீஸ் காவல் முடிந்து அவர்கள் 4 பேரை யும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காவலில் எடுத்து விசாரணை

இந்த வழக்கில் சென்னை எழும்பூர் கோா்ட்டில் சரணடைந்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய் ராஜாவை போலீசார் கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவரை நேற்று கோவை 3-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதற்கிடையே அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். சஞ்சய் ராஜாவை வருகிற 7-ந் தேதி மாலை 3 மணிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டு உள்ளார்.

இதையடுத்து சஞ்சய் ராஜாவை போலீசார் பாதுகாப்பு டன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பாிசோதனை செய்தனர். அதைத்தொடர்ந்து கொலை நடந்த இடம் உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனா துப்பாக்கிகள்

இது குறித்து போலீசார் கூறும்போது, சஞ்சய் ராஜா சீனாவில் தயாரிக்கப்பட்ட 2 கைத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும், அதில் ஒன்றை அவர் சத்தியபாண்டிக்கு எதிராக பயன்படுத்திய தாகவும் கூறப்படுகிறது.

அவர் தான் சத்தியபாண்டியை 2 முறை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. அவர் எங்கு இருந்து துப்பாக்கி வாங்கினாா் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும். அவரிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படும் என்றனர்.

1 More update

Next Story