சஞ்சீவிராயர் கோவில் தேரோட்டம்
பிடாம்பட்டியில் உள்ள சஞ்சீவிராயர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சஞ்சீவிராயர் கோவில்
விராலிமலை ஒன்றியம், மண்டையூர் ஊராட்சிக்குட்பட்ட பிடாம்பட்டியில் சஞ்சீவிராயர் என்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி விழா மற்றும் பிரமோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான பிரமோற்சவ விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் சஞ்சீவிராயர் யானை, அன்னம் கோமாதா, மான், குதிரை, கேடயம் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடாகி கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தேரோட்டம்
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு மலர் மாலைகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சஞ்சீவிராயர் உற்சவரை எழுந்தருள செய்தனர். நேற்று காலை 11.30 மணியளவில் மேள தாளம், வாணவேடிக்கைள் முழங்க தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் கோவிலை சுற்றி வந்து சரியாக 12.10 மணியளவில் கோவில் நிலையை வந்தடைந்தது. அப்போது தேரின் முன்பு பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து வழிபாடு நடத்தினர்.
இன்று தீர்த்தவாரி
தொடர்ந்து இரவு பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மாத்தூர், மண்டையூர், ஆவூர், விராலிமலை, கீரனூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் தொடர்ச்சியாக கோவிலில் இன்று (புதன்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பாதுகாப்பு பணியில் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டுவேலன் தலைமையில், மாத்தூர், மண்டையூர் போலீசார் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.