மரக்கன்றுகள் நடும் விழா
கோத்தகிரி அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கக்குச்சி கிராமத்தில் வனத்திற்கான திருவிழா நாக்குபெட்டா அமைப்பு சார்பில் நடைபெற்றது. நீலகிரியின் இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் விழா, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். நிர்வாகி ராமகிருஷ்ணன் வரவேற்றார். வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம், ஓய்வு பெற்ற முன்னாள் கலெக்டர் சுந்தர தேவன், ஓய்வு பெற்ற விங் கமாண்டர் ஜெயபிரகாஷ் பெள்ளி, இந்திய நிலக்கரி கழக இயக்குனர் ராஜேஷ் சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கக்குச்சி கிராம பகுதிகளில், பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 2022 சோலை மர நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து பள்ளி குழந்தைகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கிராம மக்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஊர் தலைவர் நஞ்சாகவுடர் நன்றி கூறினார்.