ஆறு, ஏரி கரையோரங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும்


ஆறு, ஏரி கரையோரங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும்
x
தினத்தந்தி 29 Jun 2023 6:50 PM IST (Updated: 30 Jun 2023 5:04 PM IST)
t-max-icont-min-icon

மண்அரிப்பை தடுக்க ஆறு, ஏரி கரையோரம் அதிகளவு மரக்கன்றுகள் நட வேண்டும் என்று பசுமைக்குழு கூட்டத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுறுத்தினார்.

வேலூர்

பசுமைக்குழு கூட்டம்

வேலூர் மாவட்ட பசுமைக்குழு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வேலூர் மாவட்ட வனஅலுவலர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் வெட்டுவதற்காக அனுமதி பெறப்பட்ட மரங்களின் விவரம், 2023-24-ம் நிதியாண்டில் மாவட்டம் முழுவதும் நடப்பட உள்ள மரக்கன்றுகள் பற்றி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

ஆறு, ஏரிக்கரையோரங்களில்...

வேலூர் மாவட்டத்தில் புதிதாக சாலை அமைப்பதற்கு, சாலை விரிவாக்கம் செய்வதற்கு மற்றும் புதிதாக அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு மரங்கள் வெட்டப்படுகின்றன. வெட்டப்படும் ஒவ்வொரு மரங்களுக்கு பதிலாக புதிதாக 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற அரசின் உத்தரவை அனைத்துத்துறைகளும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் மரக்கன்றுகள் நட்டு தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்க வேண்டும். கடந்த ஆண்டு மழைக்காலத்தில் வடவிரிஞ்சிபுரம் பாலாற்றங்கரையோரம் வெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். மண்அரிப்பை தடுக்க ஆறு, ஏரி கரையோரம் அதிகளவு மரக்கன்றுகள் நட வேண்டும். அனைத்து அரசுத்துறையினர் தங்களுக்கு ஒரு இலக்கை நிர்ணயித்து வரும் மாதம் தினமும் குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டும்.

பசுமை மாவட்டமாக

குறிப்பாக பொதுப்பணித்துறையினர், நீர்வளத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர், வனத்துறையினர் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேலூர் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்ற அனைத்துத்துறைகளின் ஒத்துழைப்பும் தேவை.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வனத்துறையினர், வேலூர் மாநகராட்சி உள்பட பல்வேறுத்துறை அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story