'சுருளி அருவி' சாரல் விழா தொடங்கியது; மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கிய கலெக்டர்


சுருளி அருவி சாரல் விழா தொடங்கியது; மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கிய கலெக்டர்
x
தினத்தந்தி 27 Sep 2023 9:00 PM GMT (Updated: 27 Sep 2023 9:00 PM GMT)

சுருளி அருவி பகுதியில் ‘சுருளி அருவி’ சாரல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.

தேனி

சுருளி அருவி பகுதியில் 'சுருளி அருவி' சாரல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.

'சுருளி அருவி' சாரல் விழா

தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாகவும், புண்ணியதலமாகவும் சுருளி அருவி விளங்குகிறது. இந்த அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இதனால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 'சுருளி அருவி' சாரல் விழா நடத்தப்படுவது வழக்கம்.

கடைசியாக 2019-ம் ஆண்டு இங்கு சாரல் விழா நடைபெற்றது. அதன்பிறகு கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் சாரல் விழா நடத்தப்படவில்லை.

மரக்கன்றுகளை வழங்கிய கலெக்டர்

இந்தநிலையில் நடப்பாண்டில் சாரல் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, சுருளி அருவி பகுதியில் நேற்று முதல் சாரல் விழா தொடங்கியது. இதற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, சாரல் விழாவை தொடங்கி வைத்தார். ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் முன்னிலை வகித்தார்.

இதில், ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். அப்போது சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை வனச்சரக புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கண்காட்சிகள்

சாரல் விழாவையொட்டி சுற்றுலாத்துறை சார்பில் சுருளி அருவி பகுதியில் சுற்றுலா தலங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி, செய்தி மக்கள் தொடர்புத்துறை, வனத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, நீர்வளத்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதுதவிர பொதுமக்களிடையே சிறுதானிய உணவு வகைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சாரல் விழா வருகிற 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதுவரை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் கட்டணம் இல்லாமல் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story