காவலாளி கொலையில் தேடப்பட்ட நண்பர் சென்னை கோர்ட்டில் சரண்


காவலாளி கொலையில் தேடப்பட்ட நண்பர் சென்னை கோர்ட்டில் சரண்
x

சொத்தவிளையில் நடந்த காவலாளி கொலையில் தேடப்பட்ட நண்பர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

சொத்தவிளையில் நடந்த காவலாளி கொலையில் தேடப்பட்ட நண்பர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

காவலாளி கொலை

நாகர்கோவில் கணேசபுரம் என்.வி.கே. தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் சில சமயங்களில் புகைப்படம் எடுக்கும் பணிக்கும் சென்று வந்தார்.

இவருடைய மனைவி ராதா (42). தென்காசி மாவட்டம் கீழப்பாவூரை சேர்ந்தவர். இவர்களுக்கு அனுஸ்ரீ (10), சுபஸ்ரீ (9) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற முருகன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராதா கோட்டார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் 17-ந் தேதி சொத்தவிளை கடற்கரை சாலையில் முருகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். உடனே சுசீந்திரம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

நண்பருக்கு தொடர்பா?

கொலை செய்யப்பட்ட முருகன் கடைசியாக நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனால் போலீசார் அவரை தேடிய போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் கொலை தொடர்பாக துப்பு துலக்க துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே கொலை செய்யப்பட்ட முருகனின் மோட்டார் சைக்கிள் வடசேரி பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

கோர்ட்டில் சரண்

இந்தநிலையில் போலீசார் தேடுவதை அறிந்த முருகனின் நண்பர் குமரகுரு என்ற குருநாதன் (29) சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். குமரகுருவின் சொந்த ஊர் தூத்துக்குடி. இவர் நாகர்கோவில் பீச்ரோடு பகுதியில் தங்கியிருந்து வீடு, வீடாக சென்று கொசு வலை அடிக்கும் வேலை பார்த்து வந்தார்.

இதனை தொடர்ந்து சுசீந்திரம் போலீசார் குமரகுருவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அவரை பிடித்து விசாரணை நடத்தினால் தான் முருகனின் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story