நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?சேலத்தில் சரத்குமார் பேட்டி
சேலம்
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து சேலத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சமத்துவ விருந்து
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சேலம் மண்டல அளவில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நேற்று சேலம் இரும்பாலை அருகே ஒரு மண்டபத்தில் நடந்தது. சேலம் மண்டல செயலாளர் மைக்கேல் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜவகர், சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜி, வீரபாண்டி தொகுதி செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் செங்கோடன் வரவேற்றார்.
சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு உணவு பரிமாறி சமத்துவ விருந்தை தொடங்கி வைத்தார். சமத்துவ விருந்து குறித்து தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சுந்தர் பேசினார். நிகழ்ச்சியில் மாநகர பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், மாநில துணை பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மகாலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் மாதையன், சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தன், கிழக்கு மாவட்ட செயலாளர் சிவா, மேற்கு மாவட்ட துணை செயலாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவ விருந்து நடத்தப்பட வேண்டும் என்று நினைத்தேன். தற்போது முதலில் சேலத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. விருந்துக்கு வரும் போது ஒற்றுமை விழிப்புணர்வு ஏற்படும். எனவே தான் தற்போது தொடங்கப்பட்டு உள்ள சமத்துவ விருந்து, என்னுடைய பிறந்த நாளுக்கு பிறகு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நடத்த முடிவு செய்துள்ளோம்.
அரிசி தட்டுப்பாடு
மத்திய அரசு என்.எல்.சி. விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும். என்.எல்.சி. விவகாரம் தற்போது பூதாகரமாகி உள்ளது. இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசிடம், அண்ணாமலை வலியுறுத்த வேண்டும். ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து திட்டங்கள் அறிவித்து செயல்படுத்துகின்றன. வேறு கட்சி ஆட்சிக்கு வரும் போது அந்த ஆட்சியாளர்கள் கடந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்துவது இல்லை. இது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, மற்ற மாநிலங்களிலும் உள்ளது.
நியாயமான திட்டங்களை யாராக இருந்தாலும் அதை செயல்படுத்த வேண்டும். ஒரு கட்சி தனது கொள்கை, கோட்பாடுகளை கூறி தேர்தலில் வெற்றி பெற வேண்டும். பா.ஜ.க. கொள்கைகளை மக்களிடம் கூறி கட்சியை வலுப்படுத்தவும், மக்களின் மன நிலையை அறியவும் அண்ணாமலை பாதயாத்திரை செல்லலாம். நடிகர் சங்கம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும்.
தனித்து போட்டி
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. மேலும் கூட்டணி அமைக்கவும் விரும்பவில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலை விட 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை நோக்கித்தான் நாங்கள் பயணித்து வருகிறோம். பணம் இல்லாத அரசியலை வலியுறுத்தி வருகிறோம். புதிய கூட்டணியை முன்னெடுக்கும் எண்ணம் இல்லை. 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்.
தேர்தலுக்கு பணம் என்பதை மாற்ற வேண்டும். போதை பழக்கத்தை ஒழிக்க எப்படி மறு வாழ்வு மையம் இருக்கிறதோ? அதேபோன்று எதையும் மாற்றுவதற்கு வழி இருக்கிறது. அந்த மாற்றத்துக்கான புரட்சி, மக்களிடம் இருந்து உருவாக வேண்டும். தேர்தலில் பணம் வேண்டாம் என்று மக்கள் முடிவு எடுக்க வேண்டும். நிச்சயம் மாற்றம் வரும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். 14 வயது முதல் மாணவர்களுக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.