சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசான குத்துச்சண்டை வீரர் பாக்சர் ஆறுமுகம் மரணம்


சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசான குத்துச்சண்டை வீரர் பாக்சர் ஆறுமுகம் மரணம்
x

சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசான குத்துச்சண்டை வீரர் பாக்சர் ஆறுமுகம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

சென்னை

சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசான பிரபல குத்துச்சண்டை வீரர் பாக்சர் ஆறுமுகம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68. இவர், சென்னை ராயபுரம் அமராஞ்சபுரத்தைச் சேர்ந்தவர்.

குத்துச்சண்டைக்கு பெயர் போன வடசென்னையில் பாக்சர் ஆறுமுகம் 1970-ம் ஆண்டு குத்துச்சண்டை வீரர் ஆனார். இவர், லட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். பாக்சர் ஆறுமுகம் 1980-ம் ஆண்டு கால கட்டங்களில் மிகவும் பலம் வாய்ந்த குத்துச்சண்டை வீரராக திகழ்ந்தார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாதுகாவலராகவும் இருந்துள்ளார். சார்பட்டா பரம்பரை என்ற அசோசியேஷனை ஆரம்பித்து பலருக்கு இலவசமாக குத்துச்சண்டை கற்றுக்கொடுத்தார். பல குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியனாக திகழ்ந்தார். எனவே 'நாக் அவுட் கிங்' என்று பலராலும் பாராட்டப்பட்டார்.

கமலஹாசனின் 'காக்கி சட்டை', ' வ குவார்ட்டர் கட்டிங்', 'தண்ணில கண்டம்', 'ஆரண்ய காண்டம்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 'சார்பட்டா பரம்பரை', 'பூலோகம்' ஆகிய திரைப்படங்கள் இவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை ஆகும். 'சார்பட்டா பரம்பரை' படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித், இவரிடம் நேரடியாக வந்து சார்பட்டா பரம்பரையின் கதையை கேட்டு, அதற்கு பின்னர் அந்த படத்தை இயக்கினார். பாக்சர் ஆறுமுகம் உடலுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி, நடிகர் சாய்தீனா மற்றும் சினிமா துறையினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் சென்னை காசிமேடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story