உறுப்பினர்கள் என்னை தேர்வு செய்ததால் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பணியாற்றுகிறேன்- சசிகலா
உறுப்பினர்கள் என்னை தேர்வு செய்ததால் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பணியாற்றுகிறேன் என்று சசிகலா கூறினார்.
திருக்காட்டுப்பள்ளி:-
உறுப்பினர்கள் என்னை தேர்வு செய்ததால் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பணியாற்றுகிறேன் என்று சசிகலா கூறினார்.
செயல்படுவதாக தெரியவில்லை
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிகலா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் தற்போது ஆட்சி நடைபெறுவதாகவே தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தில் 7 குழந்தைகளின் உயிர் அநியாயமாக பறிபோயுள்ளது. இதற்கு அந்த குழந்தைகளை குறை சொல்வது சரியல்ல. இது முழுவதுமாக தமிழக அரசின் இயலாமையை குறிக்கிறது.
இறந்துபோன குழந்தைகளின் உயிரென்ன சாதாரணமானதா? ரூ.5 லட்சம் அல்லது ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுப்பதால் சரியாக போய்விடுமா? தி.மு.க. அரசுக்கு சரியாக செயல்பட தெரியவில்லை. தெரிந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.
தவறுகளை சுட்டிக்காட்டினால் அதை சரி பண்ணி செயல்படுத்துவோம் என்ற நிலை அரசிடம் இல்லை. டெல்டா மாவட்டத்திற்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விட்டதாக கூறுகின்றனர். புகைப்படம் எடுத்து விளம்பரம் செய்து கொள்கின்றனர். ஆனால் இதுவரை தண்ணீர் சென்று சேரவில்லை.
தி.மு.க.வினர் மணல் அள்ளுகிறார்கள்
ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு மாவட்ட கலெக்டர் முதல் உள்ளூர் அதிகாரிகள் வரை பொறுப்பாவார்கள். உள்ளாட்சிகளில் தி.மு.க.வினர் அதிக அளவில் பொறுப்பில் உள்ளதால் வகைதொகையின்றி மணல் அள்ளிக்கொண்டு உள்ளனர்.
தமிழகத்தில் எதிர்க்கட்சி பா.ஜனதாவா, அ.தி.மு.க.வா என்ற கேள்வி இப்போதைக்கு சரியல்ல. மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும்போது இந்த கேள்விக்கு விடை கிடைக்கும். தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து இப்போது விளக்கம் கூறும் ஆளுங்கட்சியினர், அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது அப்போதைய ஆளும் கட்சியின் பட்ஜெட் வரவு செலவு திட்டத்தை படித்து பார்த்திருப்பார்கள். அப்படி இருந்தும் 500 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொண்டு. மக்களை ஏமாற்றி கொண்டுள்ளார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர்
தி.மு.க. அரசு ஏமாற்று வேலையைத்தான் செய்து கொண்டுள்ளது. அம்மா(ஜெயலலிதா) வாக்குறுதி கொடுத்தால் எப்பாடுபட்டாவது அதை நிறைவேற்ற பாடுபடுவார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை அனைத்து உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் பொதுச்செயலாளர். அந்த விதியின்படி பொதுச்செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் அரசியலுக்கு வந்து விட்டேன். நான் சந்திக்கின்ற மக்கள் எல்லாம் அம்மாவின் ஆட்சி எப்போது வரும்? எங்கள் கஷ்டம் எப்போது தீரும்? என்று கேட்டுக்கொண்டு உள்ளனர்.
24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் கடைகள்
தஞ்சை மாவட்டத்தில் ஆறுகளில் மணல் குவாரி ஏலம் என்பது ஒரு தவறான விஷயம். முறையான திட்டமிடுதல் இல்லாமல் மணல் எடுக்க அனுமதிப்பது என்பது முறையானது அல்ல.
தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது.
இ்வ்வாறு அவர் கூறினார்.